ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில் வருகிற 13-ந்தேதி இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமான புரூசெல்ஸ்-ல் அதன் தலைமையக பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் தனிமை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பால், இந்திய-ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் அடுத்த நாடுகளில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பாதுகாப்புதுறை அதிகாரிகளின் வலியுறுத்தலின்படி பிரதமர் மோடியின் பிரசல்ஸ் பயணம் பாதுகாப்பானது அல்ல என்பதால் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நிருபர்களிடம் இதனை உறுதி செய்தார்.
மேலும் பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்றும் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்